Powered by Blogger.

"கறுப்பு ஜூலை" 1983 [ Black july ]


இலங்கை அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியொரு பிம்பம் இலங்கைக்கு உண்டு. அனுமனின் லங்கா தகனம், முதல் பெரும் தீவைப்பு. தொடர்ந்து போர்களும் அழிவுகளும். மகாவம்சம் சொல்லும் துட்டகெமுனு - எல்லாளன் பகையும் போரும் அடுத்த வரலாற்றுப் பதிவு.

இதுவே இன்றுவரையும் இலங்கையின் ஆழ்மனம். இந்த ஆழ்மன வெளிப்பாட்டின் புதிய வடிவமே இப்போது தொடருகிற இனப்பிரச்சினை. ஒரு அமைதித் தீர்வுக்குப் போக முடியாமல் தடுப்பதும் இந்த ஆழ்மனப் பிரம்மைதான்.

ஐரோப்பியரின் வருகை, அவர்களின் நானூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலனிய ஆட்சி, மேற்குக் கல்வி, கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் செல்வாக்கு, ஜனநாயகம் மற்றும் இடதுசாரிச் சிந்தனை எதுவும் இந்த ஆழ்மனப் படிமத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியந்தான். இதைவிடவும், பௌத்தம் பெரும் செல்வாக்குச் செலுத்தும் இலங்கையில் அது அமைதிக்குப் பதிலாக இனவாதத்துக்குத் துணையிருக்கும் துயரம் வேறு. இன்னும், தமிழ் - சிங்களம் என்ற மனோபாவங்கள் பெரும் இடைவெளியைப் பராமரிக்கின்றன. இந்த எதிர்மனோபாவமே எல்லாவற்றுக்குமான அடிப்படைப் பிரச்சினை.

வன்முறை, கலவரம், இனப்படு கொலை, போர் எல்லாவற்றுக்கும் அடிப்படை இதுதான்.இலங்கையின் நவீன வரலாற்றில் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், சிங்களத் தலைமைகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோடு இந்த எதிர் மனோபாவம் புத்தெழுச்சியோடு தொழிற்பட்டது.

சுதந்திர இலங்கையில் 1948இல் முதலாவது நாடாளுமன்றம் கூடியது. 1949இல் மலையகத் தமிழரின் குடியுரிமையை மறுத்து அவர்களை நாடற்றவர்களாக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாகப் பெருமளவு மக்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

1956இல் தனிச்சிங்களச் சட்டத்தை அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் எஸ். டபிள். யு. ஆர். டி. பண்டாரநாயக்கா கொண்டுவந்தார்.

தமிழ் - சிங்கள எதிரெதிர் மனோநிலை பகைமை நிலையின் உச்சத்தைத் தொட்டது. விளைவு 1958இல் பெரும் இன வன்முறை. இந்த வன்முறைக்கு இப்போது வயது ஐம்பது. இந்த வன்முறையில் கொல்லப்பட்ட தமிழர்கள் நூற்றுக்கணக்கில். இலங்கையின் சிங்களப் பகுதிகளில் இருந்தும் தலைநகர் கொழும்பிலிருந்தும் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் காயங்களோடும் துயரத்தோடும் அகதிகளாகித் தமிழர் பகுதியான வடக்குக் கிழக்குக்கு வந்தார்கள். கொழும்பிலும் பிற இடங்களிலும் தமிழரின் சொத்துகள் எல்லாம் தீயிடப்பட்டன.

தீயும் குருதியும் அவலக்குரலுமான அந்த வன்முறை, வரலாற்றின் பெருங்காயம்.
1958 வன்முறை ஏற்படுத்திய காயம், அதன் தாக்கம், அதனுடைய அரசியல் விளைவு போன்றவற்றைவிடவும் 1983 வன்முறை ஏற்படுத்திய விளைவுகள் அரசியலிலும் இலக்கியத்திலும் மக்களின் வாழ்க்கையிலும் பெரிது. இடையில் 1977 வன்முறை, 1981இல் யாழ் நகர் எரிப்பு மற்றும் யாழ்ப்பாண நூலக எரிப்புடனான வன்முறை போன்றவற்றையும்விட 83 வன்முறை கொடூரமானது. இந்த வன்முறை பற்றிய பி. பி. ஸியின் ஆவணப்படமொன்றும் உண்டு.

இலங்கைத் தமிழரின் மனத்தில் பெருங்காயத்தை ஏற்படுத்திய இந்த நாள்கள் "கறுப்பு ஜூலை" என்றே நினைவுகூரப்படுகின்றன. அந்த அளவு வலிய கொடுமை அது. சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 52 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், இராசகிளி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட துயரம் அது. ஏனைய கைதிகள் கடுமையாகப் போராடியே தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

1977ஆம் ஆண்டு நடந்த வன்முறையோடு ஈழத்தமிழரின் புலப்பெயர்வு தொடங்கியிருந்தாலும் அது 83 வன்முறையுடன்தான் தீவிரமடைந்தது. 1983 வன்முறை தமிழ் இளைஞரிடையே ஏற்படுத்திய தாக்கம் விடுதலைப் போராட்டத்துக்கான பேரெழுச்சியாக மாறியது. அதற்கு முதலே ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம் கருக்கொண்டிருந்தாலும் அதை மிகப்பரந்த அளவில் வெகுசனத்தளத்துக்குப் பரிமாற்றம் செய்தது 83 வன்முறைதான்.

1983 வன்முறை ஏதோ எதேச்சையாக நடந்த ஒன்றல்ல. அது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட வன்முறை. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைச் சிதைப்பதுடன் அவர்களின் இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை.

ஏற்கனவே நடந்த இனவன்முறைகளினாலும் ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்பட்ட அனுபவத்தையுடைய தமிழ் மக்கள் தமக்கான பலமான அரசியல் தளமொன்றை நிர்மாணிக்கத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் ஆயுதந்தாங்கிய அரசியல் போராட்டத்தில் பெருவாரியாக ஈடுபடத் தொடங்கினர். தமிழ்ப் பெரும்பான்மையினரிடம் செல்வாக்குச் செலுத்திவந்த "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்ற மிதவாத அரசியல் கட்சியும் வேறு வழியில்லாமல் அரசாங்கத்தை நேரடியாக எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதனால் ஒரு கட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தடுப்பதற்கு முனைந்தார் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களையே சிறையிலடைப்பதற்குத் துணிந்தது இலங்கை அரசாங்கம். இதனால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக்காக இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது. அப்படி இருந்தபோதே அதனை அச்சுறுத்தி அதை நாட்டைவிட்டே வெளியேற்றியது அரசாங்கம். எதிர்க்கட்சியை இயங்க முடியாத நிலைக்குத் தள்ளும் அரசை எப்படி அழைப்பது? எந்த ஜனநாயகப் பட்டியலில் அதைச் சேர்ப்பது?

ஆக, தமிழர்கள் மேலும் அந்நியப்பட்டுக்கொண்டே போனார்கள். அது தவிர்க்க முடியாததாகவும் அமைந்தது. இந்த அந்நியப்படுதல் ஜனநாயகரீதியான அரசியல் செயற்பாடுகளில் - அமைதியான அரசியல் செயற்பாடுகளில் - நம்பிக்கையீனத்தைத் தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

1983 வன்முறையே உள்நாட்டு மட்டத்திலிருந்த இனப்பிரச்சினையைப் பிராந்திய மட்டத்துக்குக் கொண்டுவந்தது. இந்த வன்முறையோடு இந்தியா அதிகளவில் இலங்கை விவகாரத்தில் தலையிடத் தொடங்கியது. பின்னர் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா நேரடித் தலையீட்டைச் செய்வதற்கான தொடக்கப் புள்ளி 83 வன்முறையே.

(இதுவே பின்னர் சர்வதேச மட்டத்தில் இலங்கை இன முரண்பாட்டு விவகாரம் அறியப்படவும் காரணமாகியது).

அதற்கு முன்னர் தமிழ்நாடு அளவில், தனியே உணர்வு நிலையில் மட்டும் இருந்த ஈழத் தமிழர் பாதிப்பு விவகாரம் இப்போது மத்திய அரசு மட்டத்துக்குப் போனது. போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியைக் கொடுத்து ஆயுதங்களையும் வழங்கியது இந்தியா. பாதிக்கப்பட்ட தமிழர்களின் அரசியல் போராட்டத்தை - அது ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் நேரடியாக ஆதரித்து அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.

இதன் விளைவு தமிழ் இளைஞரிடையே பெரும் அரசியல் எழுச்சியை உருவாக்கியது. அந்த அரசியல் எழுச்சி ஆயுதப் போராட்டத்தளத்தைப் பலப்படுத்துவதாகவும் அதை மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைந்தது.

மற்ற எல்லா வன்முறைகளைவிடவும் 1983இல் நடத்தப்பட்ட வன்முறை சிங்களத் தரப்புக்கு எதிர்விளைவுகளையே அதிகமாகத் தந்தது. தமிழ் மக்களை மிரட்டிப் பணியவைக்கும் ஒரு போரியல் உபாயமாகவே இந்த வன்முறை அரசாங்கத்தினாலும் சிங்களத்தரப்பினராலும் திட்டமிடப்பட்டாலும், இது சிங்களத்தரப்புக்கும் சிறிலங்கா அரசுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்ததுடன் மிகப் பெரிய சவாலையும் உருவாக்கியது. தமிழர்கள் உலகமெங்கும் பரந்து தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைச் சொல்வதற்கான வாய்ப்பையும் 83 வன்முறையே உருவாக்கியது.

கொழும்பில் நிர்வாணமாகக் கொளுத்திக் கொல்லப்பட்ட தமிழர்களைப் போல இனியொரு தடவை யார்மீதும் கைவைப்பதற்கு யோசிக்க வேண்டிய நிலை ஒன்றை இந்த நிலவரங்கள் உருவாக்கின.

ஆக, 83 வன்முறை, தமிழர்களைப் பலப்படுத்தியது. அந்தப் பலப்படுத்துதலே அதன் பின்னரான வன்முறைகள் கொழும்பிலோ பிற தென்பகுதிகளிலோ நடக்க முடியாமல் தடுத்தன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அரசாங்கம் வேறு விதமாகவே தமிழ் மக்களை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இவை தனியாக நோக்கப்பட வேண்டியவை.

நெருப்பையும் குருதியையும் அவலக்குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது, வன்முறையன்றின் சித்திரம் அல்லது கலவரமொன்றின் தோற்றம் எப்போதும் மனத்தில் விரிகிறது. கடந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்த வன்முறைகள் எழுந்து அதே வலியை மீண்டும் தருகின்றன. இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?

இரத்தவாடையும் கண்ணீரின் ஓலமும் இல்லாத ஈழம் எப்போது தமிழ் மக்களின் வாழ்வில் .......?

1


2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23
24

25

26

27

28

29

30

31

32

33

55


Black July 1983


blackjuly_1983Borella_62702_200

fg

SRI LANKA EXPLOSIONS

0 Responses to “"கறுப்பு ஜூலை" 1983 [ Black july ]”:

Leave a comment

Read More Srilanka's Genocide ,,,,,